< Back
கால்பந்து
ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி
கால்பந்து

ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி

தினத்தந்தி
|
16 May 2024 10:57 AM IST

சுனில் சேத்ரி ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருத்தப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு இப்போது பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி.

சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் வரிசையில் டாப்-10 இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் சுனில் சேத்ரி. 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார். தனது அபார திறமையால் கால்பந்து உலகில் தனக்கென தனி இடம் பிடித்த சுனில் சேத்ரி, தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜூன் 6ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியே தனது இறுதிப்போட்டியாக இருக்கும் என்று சுனில் சேத்ரி கூறியுள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து சுனில் சேத்ரி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுனில் சேத்ரி பற்றிய சுவாரசிய தகவல்கள்:

சுனில் சேத்ரி ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் தந்தை கே.பி.சேத்ரி. இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார். அவரது அம்மா சுசிலா சேத்ரி நேபாளத்தை சேர்ந்தவர். சேத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்தமான விளையாட்டு. சச்சின்தான் அவருக்கு பிடித்த வீரர். அதனால் அவரும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பி தன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை அணுகியுள்ளார். "கிரிக்கெட் கிட் கொண்டு வந்தால் பயிற்சி கொடுக்க தயார்" என சொல்லியுள்ளார் அந்த ஆசிரியர். ஆனால் கிரிக்கெட் கிட் வாங்க காசு இல்லாததால் எனது கிரிக்கெட் கனவை கலைத்து விட்டு கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தியதாக சுனில் சேத்ரியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

முதல் முறையாக சுனில் சேத்ரி 2001 இல் தாய்லாந்தில் நடைபெற்ற 'ஆசிய ஸ்கூல் சாம்பியன்ஷிப்' தொடரில் சேத்ரி ஸ்கோர் செய்த நான்கு கோல்கள் அவரது விளையாட்டு கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. சேத்ரி மேற்குவங்கத்தின் புகழ்ப்பெற்ற 'மோகன் பகான்' கிளப் அணியில் விளையாடி தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தன்னை தகவமைத்துக் கொண்டு இளையோருக்கான இந்திய கால்பந்தாட்ட அணியில் விளையாடவும் செய்தார். அப்படியே சீனியர் கால்பந்தாட்ட அணியில் மாற்று வீரராக இருபது வயதில் இணைந்தார்.

2005-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் பைசுங் பூட்டியா இல்லாததால் முன்கள வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக சேத்ரி உருவானார்.

பைசுங் பூட்டியாவின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை முன்னின்று வழிநடத்தி செல்லும் வாய்ப்பை பெற்றார் சேத்ரி. அவரது தலைமையில் பல முக்கியமான தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்தாட்டத்தில் கால் பதித்து 18 ஆண்டுகள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்