ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜாம்ஷெட்பூர் எப்சி அணியில் மீண்டும் இணைந்த பிரதிக் சௌதரி
|பெங்களூரு எப்சி அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடிய இவர், மீண்டும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்கு திரும்பியுள்ளார்.
ஜாம்ஷெட்பூர்,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் ஜாம்ஷெட்பூர் அணி கடந்த சில தினங்களுக்கு முன் மிட்பீல்டர் ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது. இவர் கடந்த அணி ஜாம்ஷெட்பூர் அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இந்த நிலையில் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி புதிதாக இந்திய வீரர் பிரதிக் சௌதரியை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐ-லீக் கிளப் தொடரில் மும்பை எப்சிக்காக விளையாடியபோது, பிரதிக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மூலம் ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமானார். பின்னர் 2017-18ல் ஆண்டில் டெல்லி டைனமோஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் 2018 ஆம் ஆண்டு இவர் முதல் முறையாக ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்காக விளையாடினார்.
அந்த சீசனில் ஜாம்ஷெட்பூர் எப்சி (2018-19) சிறப்பாக விளையாடி 5வது இடத்தைப் பிடித்தது. பின்னர் பிரதிக் 2019-20 இல் மும்பை சிட்டி எஃப்சிக்காக விளையாடினார். பின்னர் 2 ஆண்டுகள் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடிய இவர் மீண்டும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்கு திரும்பியுள்ளார்.