கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் அடக்கம் - லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
|கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
சான்டோஸ்,
கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பீலே உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு வெளியே வந்த சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோ, 'கால்பந்தின் அடையாளம் பீலே. அவரை கவுரவப்படுத்தும் வகையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும், தங்களிடம் இருக்கும் கால்பந்து ஸ்டேடியங்களில் ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டும்படி கேட்கப்போகிறோம்' என்றார். முன்னதாக இன்பான்டினோ, பீலே உடலுக்கு அருகில் சிலருடன் நின்று 'செல்பி' எடுத்தது சர்ச்சையானது.
பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மார் பிரான்சில் இருப்பதால் அவரால் வர இயலவில்லை. அவருக்கு பதிலாக அவரது தந்தை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள், பிரேசில் மற்றும் அவர் 16 ஆண்டுகள் விளையாடிய சான்டோஸ் கால்பந்து கிளப்புக்குரிய கொடியுடன் அவரது பெயரை இடைவிடாது எழுப்பியபடி உருகினர்.
24 மணி நேர அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சான்டோஸ் வீதிகளில் எடுத்து செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது கால்பந்து மன்னனுக்கு விடையளித்தனர்.
அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தை கடந்த போது அங்கு சிறிது நேரம் வாகனம் நிறுத்தப்பட்டது. உடல்நலம் குன்றியுள்ள செலிஸ்டி மகன் இறந்த தகவலை புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
இறுதியில் 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.
இங்கிருந்து பார்க்கும் போது, பீலே தனது வாழ்வின் பெரும்பகுதியை கழித்த சான்டோஸ் கிளப்பின் ஸ்டேடியம் தெரியும். தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.