ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி
|கொலம்பியா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
நவி மும்பை,
ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.
16 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் ஸ்பெயின்- கொலம்பியா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தன. அந்த வகையில் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று இறுதி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. முதல் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்காத நிலையில், 2-வது பாதியில் கொலம்பியா அணியின் அனா மரியா குஸ்மான் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தவறுதலாக ஸ்பெயின் அணிக்காக கோல் அடித்தார்.
இதனால் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த முறை ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி அதை மீண்டும் தக்கவைத்துள்ளது.