ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் தோல்வி
|முதல் ஆட்டத்தில் வெற்றியும், 2-வது ஆட்டத்தில் டிராவும் கண்டு இருந்த சென்னை அணி இந்த சீசனில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
சென்னை,
11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு அரங்கேறிய லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி அணி, எப்.சி.கோவாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 11-வது நிமிடத்தில் கோவா வீரர் ரிடீம் தலையால் முட்டி பந்தை வலைக்குள் திருப்பினார். இதனால் அந்த அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பதில் கோல் திருப்ப சென்னை அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
கடைசி நேரத்தில் (90-வது நிமிடம்) கோவா அணி மேலும் ஒரு கோல் போட்டு அதிர வைத்தது. அந்த அணி வீரர் நோவா இந்த கோலை அடித்தார். முடிவில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது.
முதல் ஆட்டத்தில் வெற்றியும், 2-வது ஆட்டத்தில் டிராவும் கண்டு இருந்த சென்னை அணி இந்த சீசனில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
மும்பையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் அணிகளும், ஐதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப.சி.- பெங்களூரு எப்.சி. அணிகளும் மோதுகின்றன.