< Back
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: துருக்கி கால்இறுதிக்கு முன்னேற்றம்
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: துருக்கி கால்இறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
4 July 2024 2:40 AM IST

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் துருக்கி அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

லைப்ஜிக்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு லைப்ஜிக் நகரில் நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) துருக்கி - ஆஸ்திரியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 57-வது வினாடியிலேயே துருக்கி அணி முதல் கோல் அடித்தது. கார்னர் வாய்ப்பில் கோல் எல்லையை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை ஆஸ்திரியா கோல் கீப்பர் பேட்ரிக் பென்ட்ஸ் தடுத்தார். அவரது கையில் பட்டு திரும்பிய பந்தை துருக்கி வீரர் மெரிக் டெமிரால் மின்னல் வேகத்தில் கோல் வலைக்குள் அனுப்பினார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2-வது அதிவேக கோல் இதுவாகும். 59-வது நிமிடத்தில் மெரிக் டெமிரால் தலையால் முட்டி மீண்டும் கோலடித்தார். இதனால் துருக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

66-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மைக்கேல் கிரிகோரிட்ச் கோல் போட்டு பரபரப்பை உருவாக்கினார். கடைசி நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் பாம்கார்ட்னெர் தலையால் முட்டி கோல் வலையை நோக்கி திருப்பிய பந்தை துருக்கி அணியின் கோல்கீப்பர் மெர்ட் குனோக் அருமையாக தடுத்து தங்கள் அணியை காத்தார்.

முடிவில் துருக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி 3-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரியா ஆதிக்கம் செலுத்தியதுடன், அதிகமுறை கோல் வலையை நோக்கி ஷாட் அடித்தாலும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அளித்தது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நெதர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை பந்தாடி 2008-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக கால்இறுதியை எட்டியது. நெதர்லாந்து அணியில் கோடி காக்போ 20-வது நிமிடத்திலும், மாற்று ஆட்டக்காரர் டோனில் மாலென் 83-வது மற்றும் கடைசி நிமிடத்திலும் கோல் அடித்தனர். கால்இறுதியில் நெதர்லாந்து அணி, துருக்கியை சந்திக்கிறது.

இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்-ஜெர்மனி (இரவு 9.30 மணி), போர்ச்சுகல்-பிரான்ஸ் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மேலும் செய்திகள்