ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி
|ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தற்போது நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டாட்மண்ட்,
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று நடந்து வருகிறது.
டாட்மண்டில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி - டென்மார்க் அணிகள் மல்லுக்கட்டின. ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே ஜெர்மனிக்கு கோல் கிட்டியது. ஆனால் அந்த அணியின் ஜோசுவா கிம்மிச், எதிரணி வீரரை தள்ளிவிட்டு 'பவுல்' செய்தது தெரிய வந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது. 35-வது நிமிடத்தின் போது திடீரென இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். 20 நிமிட பாதிப்புக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.
53-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஜெர்மனியின் காய் ஹவர்ட்ஸ் கோல் அடித்தார். 68-வது நிமிடத்தில் மற்றொரு ஜெர்மனி வீரர் ஜமால் முசியாலா கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்தினார். முடிவில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
இன்றைய ஆட்டங்களில் பிரான்ஸ்- பெல்ஜியம் (இரவு 9.30 மணி), போர்ச்சுகல்- சுலோவேனியா (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.