< Back
கால்பந்து
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பாக 8 மருத்துவ ஊழியர்கள் மீது விசாரணை - திடுக்கிடும் தகவல்

Image Courtesy : AFP 

கால்பந்து

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பாக 8 மருத்துவ ஊழியர்கள் மீது விசாரணை - திடுக்கிடும் தகவல்

தினத்தந்தி
|
23 Jun 2022 6:58 PM IST

மருத்துவர்கள் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனா. இவர் கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக அறியப்படுகிறார். அர்ஜென்டினா அணிக்காக 1977 முதல் 1994 வரையில் சர்வதேச அளவில் தனது அசத்தலான ஆட்டத்தால் பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். 1986 நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை வென்றிருந்த அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டவர் மரடோனா.

2020ஆம் ஆண்டு, மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மரடோனாவுக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக டியாகோ மரடோனா உயிரிழந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமின்றி அவரது மரணத்தில் சர்ச்சைகள் நிலவி வந்தது. மருத்துவர்கள் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தற்போது மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் குடும்ப மருத்துவருமான லியோபோல்டோ லுக், மனநல மருத்துவர் அகஸ்டினா கோசாச்சோவ், உளவியலாளர் கார்லோஸ் டயஸ், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் நான்சி ஃபோர்லினி மற்றும் செவிலியர்கள் நான்கு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

இவர்களின் கவனக்குறைவு காரணமாக மரடோனா உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். விசாரணை தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எட்டு முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்