ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளாவை சேர்ந்த வீரரை ஒப்பந்தம் செய்தது சென்னையின் எப்.சி அணி
|கேரளாவை சேர்ந்த பிரசாந்த் என்பவரை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசன் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன. அந்த வகையில் சென்னையின் எப்.சி அணி, அணியை வலுவாக கட்டமைக்க பல புதிய வீரர்களை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை அணி கானா கால்பந்து வீரர் குவமே கரிகாரியை ஒப்பந்தம் செய்தது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தாய்லாந்து லீக்கில் சிறப்பாக விளையாடியவர். அதன் பிறகு சென்னை அணி மேலும் ஒரு வெளிநாட்டு வீரரான குரோஷிய வீரர் பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கை ஒப்பந்தம் செய்தது.
பின்னர் சென்னையை சேர்ந்த அஜித் குமாரை சென்னை அணி ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் என்பவரை சென்னை அணி நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. 25 வயதான இவர் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடிய பிறகு தற்போது சென்னை அணியில் இணைந்துள்ளார்.
சென்னை அணியில் இணைந்தது குறித்து பிரசாந்த் கூறுகையில் "இந்த கிளப்பின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது 100% பங்களிப்பையும் வழங்கி அணிக்காக விளையாடுவேன்" என்றார்.
இரண்டு முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி, மோகன் பகான் அணிக்கு எதிராக அக்டோபர் 10 ஆம் தேதி தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.