சென்னையின் எப்.சி. பயிற்சியாளராக கோயல் நியமனம்
|ஓவென் கோயல் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
சென்னை,
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யின் புதிய தலைமை பயிற்சியாளராக ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் பிரபலமான பிரிமீயர் லீக் கால்பந்தில் பர்ன்லி, போல்டன் ஆகிய கிளப் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.
57 வயதான ஓவென் கோயல் கூறுகையில், 'சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவது உண்மையிலேயே உற்சாகம் தருகிறது. கடைசியாக சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த கிளப் ஏற்கனவே இரு முறை பட்டம் வென்றுள்ளது. அதே போன்று மீண்டும் சாதிக்க முயற்சிப்போம். புதிய சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.