இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் 2-ந்தேதி நடைபெறும் - புதிய அறிவிப்பு வெளியீடு
|இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து அமைப்புக்கு சிக்கல்
இந்திய கால்பந்து சம்மேளனத்தில், தேவையற்ற 3-ம் தரப்பு தலையீடு இருப்பதாக கூறி, இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) தடை விதித்தது. இதனால் இந்தியாவில் அக்டோபர் மாதம் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை போட்டியை(17 வயதுக்குட்பட்டோர்) நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கவுரவமிக்க இந்த போட்டியை தக்க வைக்கும் முயற்சியாக மத்திய அரசின் வேண்டுகோளின்படி, இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகித்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை கலைத்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் வீரர்கள் 36 பேருக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமை திரும்ப பெறப்பட்டது. அத்துடன் இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மீண்டும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் காரணமாக வருகிற 28-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்ட நிர்வாகிகள் தேர்தலில் சில நடைமுறைகளை மாற்ற வேண்டி இருந்ததால் தேர்தலை ஒரு வாரம் தள்ளிவைக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தியது.
நிர்வாகிகள் தேர்தல்
இந்த நிலையில், இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி நடைபெறும் என்று தேர்தலை நடத்தும் அதிகாரி உமேஷ் சின்கா நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டார். வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 28-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 30-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். 2-ந்தேதி டெல்லியில் உள்ள இந்திய கால்பந்து சம்மேளன தலைமை அலுவலகத்தில் தேர்தல் நடத்தப்படும். அன்றோ அல்லது மறுநாளோ தேர்தல் முடிவு வெளியிடப்படும்.
புதிய உத்தரவுப்படி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட முன்னாள் வீரர், வீராங்கனைகள் 36 பேர் வாக்களிக்க முடியாது. இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு உட்பட்ட 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த கால்பந்து நிர்வாகிகளே வாக்களிக்க தகுதி படைத்தவர்கள்.
முன்பு இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியா, தலைச் சிறந்த வீரர் என்ற அடிப்படையில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அது இனி செல்லாது. அவர் தனது மாநிலத்தை சேர்ந்த கால்பந்து அமைப்பு மூலம் வேண்டுமென்றால் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
தடையை நீக்க கோரிக்கை
இதற்கிடையே, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பொறுப்பு செயலாளர் சுனந்தா தார், சர்வதேச கால்பந்து சங்க பொதுச்செயலாளர் பட்மா சமோராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கமிட்டி கலைக்கப்பட்டு இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்கும் அதிகாரம் அதன் நிர்வாகிகளிடமே வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.