10 அணிகள் பங்கேற்கும் அஞ்சல் துறையினருக்கான அகில இந்திய கால்பந்து போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்
|தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
முழுக்க முழுக்க அஞ்சல் துறையில் பணியாற்றுவோருக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் லீக்கில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் காலை 9.30 மணிக்கு மோதுகின்றன. இந்த தொடரில் தமிழக அணி கடைசியாக 2016-17-ல் சாம்பியன் கோப்பையை வென்று இருந்தது. மாலை 3.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா-அசாம் அணிகள் சந்திக்கின்றன.
மேற்கண்ட தகவலை அஞ்சல்துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார், திருச்சி மண்டல தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை. இந்த முறை போட்டிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டியை பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.