2700 கோடி ரூபாய் ஒப்பந்தம்: சவுதி அணியை சந்திக்கும் வாய்ப்பை நிராகரித்த கால்பந்து வீரர்
|கிலியன் எம்பாப்பேயை தங்கள் அணிக்கு இழுக்க சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் ஆர்வம் காட்டியது.
பாரீஸ்,
பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே துடிப்பு மிக்க ஒரு வீரர். கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 8 கோல்கள் அடித்து கவனத்தை ஈர்த்தார். கிளப் போட்டியை பொறுத்தவரை அவர் அங்குள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக 2017-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை 176 ஆட்டங்களில் விளையாடி 148 கோல்கள் அடித்துள்ளார்.
பி.எஸ்.ஜி. அணியுடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் மீதமுள்ளது. மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு ப்ரீ டிரான்ஸ்பர் முறையில் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்தன.
இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி உலக சாதனை தொகையான 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் பீஸ் செலுத்த முன்வந்தது. இந்த நிலையில் தான் அல்-ஹிலால் அணி நிர்வாகம் எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்பே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், மெஸ்சி அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.