< Back
கால்பந்து
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - பிபா தலைவர் தகவல்
கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - 'பிபா' தலைவர் தகவல்

தினத்தந்தி
|
8 Dec 2022 3:10 AM IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இதுவரை 200 கோடி பேர் பார்த்துள்ளதாக ‘பிபா’ தலைவர் இன்பான்டினோ கூறியுள்ளார்.

தோகா,

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் ரவுண்ட்16 சுற்று முடிவடைந்து விட்டது. லீக் சுற்று முடிவில் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ் ஆகிய அணிகள் கால்இறுதிக்கு வந்து விட்டாலும், தங்களது லீக்கில் தலா ஒரு அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தன. முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி, உருகுவே லீக் சுற்றுடன் நடையை கட்டின.

இந்த நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் (பிபா) கியானி இன்பான்டினோ நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

"இதுவரை நடந்துள்ள எல்லா ஆட்டங்களையும் நான் பார்த்தேன். உலகக் கோப்பை வரலாற்றில் ஆகச்சிறந்த குரூப் பிரிவு ஆட்டங்களாக இவை இருந்தது என்பதை உறுதியாக கூற முடியும். அந்த வகையில் இந்த உலகக் கோப்பை போட்டி நினைவில் நிலைத்து நிற்கும். அழகான ஸ்டேடியங்களில் அரங்கேறிய ஒவ்வொரு ஆட்டமும் தரமும், விறுவிறுப்பும் நிறைந்ததாக இருந்தது.

சராசரியாக 51 ஆயிரம் ரசிகர்கள் என்று போட்டியை இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டுகளித்தனர். டி.வி.யில் பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கையிலும் சாதனை படைத்து இருக்கிறோம். இந்த எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு ஏற்கனவே 200 கோடியை தாண்டி விட்டது.

வரலாற்றில் முதல்முறையாக எல்லா கண்டங்களைச் சேர்ந்த அணிகளும் 'நாக்-அவுட்' சுற்றுக்கு வந்துள்ளன. இவை கால்பந்து விளையாட்டு உண்மையிலேயே உலகம் முழுவதும் பரவியிருப்பதை காட்டுகிறது. நாக்-அவுட் சுற்றில் 8 ஆட்டங்களில் 28 கோல்கள் அடிக்கப்பட்டன.1986-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ரவுண்ட் 16 பிரிவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோல்கள் இது தான்.

தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அதே மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைவு வரை தொடரும் என்று நம்புகிறோம். உலகம் முழுவதும் ஒட்டுமொத்தத்தில் ஏறக்குறைய 500 கோடி மக்கள் போட்டியை கண்டுகளிப்பார்கள் என்று நம்புகிறேன்."

இவ்வாறு இன்பான்டினோ கூறினார்.

மேலும் செய்திகள்