ஜிம்பாப்வே தொடர்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்
|ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார், இதன் மூலம் சச்சினின் நீண்ட கால சாதனையை முறியடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த சுப்மன்கில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். முதல் போட்டியில் 82 ரன்களும், 2-வது போட்டியில் 33 ரன்களும், 3-வது போட்டியில் 130 ரன்களும் குவித்தார். இதன் மூலம் அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
முதல் சதத்தை பதிவு செய்த சுப்மன் கில், நீண்ட வருடங்களாக தகர்க்க முடியாத சச்சின் சாதனையை தகர்த்துள்ளார். அதாவது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். இவர் 130 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த சாதனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்(127 நாட் அவுட்) உள்ளார்.
அதற்கு அடுத்தப்படியாக அம்பதி ராயுடு (124), சச்சின் (122), யுவராஜ் சிங் (120) ஆகியோர் உள்ளனர். சுப்மன் கில் மேலும் ஒரு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். குறைந்த வயதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்த இந்திய வீரர்களில் இவர் 2-வது இடத்தில் உள்ளார். இவர் 22 வயதில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்பு முகமது கைப் 21 வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 9 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராகவும் அசத்தியுள்ளார். அந்த பட்டியலில் 1. சுப்மன் கில் (499) 2. ஷ்ரேயாஸ் ஐயர் (469) 3. சித்து (417) ஆகியோர் உள்ளனர். மேலும், ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் அறிமுக ஒருநாள் சதத்தை அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா (2010) மற்றும் கேஎல் ராகுல் (2016) ஆகியோருக்குப் பின் சுப்மன் கில் பெற்றுள்ளார்.