ஐ.பி.எல்.2025: லக்னோ அணியின் ஆலோசகராகும் ஒருநாள் உலகக்கோப்பை நாயகன்? வெளியான தகவல்
|லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற ஜாகீர் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் கடந்த வருடமே அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மோர்கலும் விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரரான ஜாகீர் கானிடம் அந்த அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அதனை ஏற்கும் பட்சத்தில் நிச்சயம் அது லக்னோ அணிக்கு வலுவானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.