என் வாழ்க்கை வரலாறு படமானால் இவர்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் - யுவராஜ் சிங்
|கிரிக்கெட்டில் சாதனை புரிந்த பல முன்னாள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்றது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 750 ரன்களும் குவித்துள்ளார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்றவர். அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் யுவராஜ் சிங்கிடம் , "தற்போது உள்ள கதாநாயகர்களில் உங்கள் வேடத்தில் எவர் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?" என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:
சமீபத்தில் நான் "அனிமல்" திரைப்படம் பார்த்தேன். அதில் ரன்பீர் கபூர் நடிப்பை கண்டதிலிருந்து எனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் திரையில் என்னை பிரதிபலிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் எனும் முடிவில் உள்ளேன்.
ஆனால், அது இயக்குனரின் முடிவை பொறுத்தது. இது சம்பந்தமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து நல்ல செய்தி அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
கிரிக்கெட்டில் சாதனை புரிந்த பல முன்னாள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. உதாரணமாக கபில் தேவ், மகேந்திர சிங் தோனி, சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன.