திரைத்துறையில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்.. அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
|யுவராஜ் சிங், தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட்க்கு எதிராக ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர் அடித்ததை யாராலும் மறக்க முடியாது.
அதே போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தார். அதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்றவர். அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் யுவராஜ் சிங், தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இந்த படத்தை அவரே டைரக்டு செய்து நடிக்க இருப்பதாகவும், விரைவில் பட வேலைகளை தொடங்க இருப்பதாகவும் அதிரடியாக அறிவித்து உள்ளார். இது குறித்து யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"என் பகுதியில் நான். எனது சொந்த சுயசரிதை படத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக என்னை அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். அதற்காக வாழ்த்துங்கள் நண்பர்களே. இன்னும் ஓரிரு வருடத்தில் பெரிய திரையில் இறுதி முடிவை பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்டேட்டுகளுக்காக காத்திருங்கள்" என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ் ஆகியோரின் வாழ்க்கை சினிமா படங்களாக வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.