சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா...வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்
|ஜிம்பாப்வேவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அபிஷேக் சர்மா சதம் (100 ரன்) அடித்தார்.
மும்பை,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன்னும், கெய்க்வாட் 77 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 235 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது சதம் அடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு யுவராஜ் சிங் வாழ்த்து கூறினார்.
அபிஷேக் சர்மாவிடம் யுவராஜ் சிங் கூறியதாவது, "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என கூறினார்.