இளையோர் ஆசிய கோப்பை; இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்...!
|பாகிஸ்தான் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியா அல்லது வங்கதேச அணியை எதிர்கொள்ளும்.
கொழும்பு,
8 அணிகள் இடையிலான இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் யூசப் 88 ரன், ஹாரிஸ் 52 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் லஹிரு சமரக்கூன், பிரமோத் மதுஷான், கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 323 ரன்கள் எடுத்தால் இறுதிபோட்டிக்கு முன்னேறலாம் என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி ஆடியது.
இலங்கை அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்ணாண்டோ ஒரு முனையில் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் களம் இறங்கிய லசித் 0 ரன், மினோத் பானுகா 1 ரன், பசிந்து சூர்யபண்டாரா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து அவிஷ்கா பெர்னாண்டோவுடன் சஹான் ஆராச்சிகே ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர். இருவரும் தலா 97 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் இலங்கை அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ரன்களே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அர்ஷத் இக்பால் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியா அல்லது வங்கதேச அணியை எதிர்கொள்ளும்.