< Back
கிரிக்கெட்
இளையோர் ஆசிய கோப்பை; நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா...!

Image Courtesy: @BCCI

கிரிக்கெட்

இளையோர் ஆசிய கோப்பை; நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா...!

தினத்தந்தி
|
17 July 2023 7:45 PM IST

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 19ம் தேதி சந்திக்கிறது.

கொழும்பு,

இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ - நேபாளம் ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

நேபாளம் தரப்பில் ரோகித் 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில்நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டும், ராஜ்வர்தன் ஹங்கார்கேகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 22.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 58 ரன்னும், துருவ் ஜூரெல் 21 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணி தான் ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது.

மேலும் செய்திகள்