< Back
கிரிக்கெட்
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; யுஏஇ-க்கு எதிராக இந்திய அணி வெற்றி..!!

image courtesy;twitter/@BCCI

கிரிக்கெட்

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; யுஏஇ-க்கு எதிராக இந்திய அணி வெற்றி..!!

தினத்தந்தி
|
14 July 2023 5:40 PM IST

8 விக்கெட் வித்தியாசத்தில் யுஏஇ அணியை விழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

கொழும்பு,

இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ - யுஏஇ ஏ அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஆர்யன்ஷ் சர்மா, ஜொனாதன் பிகி ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஜொனாதன் பிகி 0 ரன், அடுத்து களம் இறங்கிய அன்ஷ் டாண்டன் 5 ரன், லவ்ப்ரீத் சிங் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அஷ்வந்த் சிதம்பரம் களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்யன்ஷ் சர்மா 38 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் யுஏஇ ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் களத்தில் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.சாய் சுதர்சன் 8 ரன்களிலும், அபிஷேக் சர்மா 19 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் யாஷ் துல் மற்றும் நிகின் ஜோஸ் இணை அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர்.கேப்டன் யாஷ் துல் சதமடித்து அசத்தினார்.அவர் 84 பந்துகளில் 20 பவுண்டரி 1 சிக்சர் உட்பட் 108 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.நிகின் ஜோஸ் 41 ரன்கள் எடுத்தார்.இதனால் இந்திய அணி 26.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சதமடித்து அசத்திய யாஷ் துல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்