< Back
கிரிக்கெட்
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
கிரிக்கெட்

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

தினத்தந்தி
|
23 July 2023 6:17 AM IST

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பாகிஸ்தானையும், அரைஇறுதியில் வங்காளதேசத்தையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முகமது ஹாரிஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றது. இந்தியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. அரைஇறுதியில் இலங்கையை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்திய அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேப்டன் யாஷ் துல், அபிஷேக் ஷர்மாவும், பந்து வீச்சில் நிஷாந்த் சிந்து, மானவ் சுதார், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் கொண்ட ஆல்-ரவுண்டர் முகமது வாசிம், கேப்டன் முகமது ஹாரிஸ், தொடக்க வீரர் ஷகிப்ஜடா பர்ஹான், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் இக்பால் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

தோல்வியையே சந்திக்காத இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்த முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் லீக் சுற்றில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து பட்டத்தை சொந்தமாக்க பாகிஸ்தான் அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்