"நீங்கள் விளையாடுவதை பார்க்க காத்திருக்கிறேன்"- நட்பை பொழிந்த மஞ்சரேக்கர், ஜடேஜா- ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!
|ஒரு காலத்தில் மோதல் போக்குடன் இருந்த ஜடேஜா– மஞ்சரேக்கர் தற்போது நட்பை பகிர்ந்துள்ளனர்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. கடந்த காலங்களில் இவருக்கும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் பலமுறை வார்த்தை மோதல் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக சஞ்சய் மஞ்சரேக்கர் ஜடேஜா குறித்து கடுமையான விமர்சனங்களை பலமுறை முன்வைத்துள்ளதால் அவரை ரசிகர்கள் பலமுறை எதிர்த்துள்ளனர்.
இதனால் ரவீந்திர ஜடேஜா – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறித்த செய்தி என்றாலே கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் விரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் போன்ற ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்று வரும் லெஜெண்ட்ஸ் தொடரில் தொகுப்பாளராகவும் வர்ணனையாளராகவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது பணியாற்றி வருகிறார்.
மறுபுறம் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வரும் ரவீந்திர ஜடேஜா நேற்று நடைபெற்ற ஒரு லெஜன்ட்ஸ் போட்டியை வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.
அப்போது அப்போட்டியை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொகுத்து வழங்கியதை பார்த்து உற்சாகமடைந்த ரவீந்திர ஜடேஜா "என்னுடைய அன்பான நண்பரை திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்ற வாசகத்துடன் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டார்.
அதை பார்த்து ஆச்சரியமடைந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் "உங்களுடைய அன்பான நண்பன் நீங்கள் விரைவில் களமிறங்கி விளையாடுவதை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்" என்று ஜடேஜாவுக்கு அன்புடன் பதிலளித்துள்ளார்.
இவர்களின் இந்த உரையாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு காலத்தில் மோதல் போக்குடன் இருந்த ஜடேஜா – மஞ்சரேக்கரா இது என வியப்பதுடன் பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.