< Back
கிரிக்கெட்
போட்டியின் முடிவை அவர் எளிதாக்கி இருக்கலாம்: கோலி ஆட்டமிழந்த முறையை சாடிய கவுதம் கம்பீர்

Image courtesy: PTI/ICC

கிரிக்கெட்

"போட்டியின் முடிவை அவர் எளிதாக்கி இருக்கலாம்": கோலி ஆட்டமிழந்த முறையை சாடிய கவுதம் கம்பீர்

தினத்தந்தி
|
29 Aug 2022 4:42 PM IST

கவுதம் கம்பீர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி ஆட்டமிழந்த முறையை சாடியுள்ளார்.

துபாய்,

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்றைய போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச அளவில் விராட் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது. இதனால் ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்கும் போதும் அவர் மீண்டும் பார்முக்கு வர வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இருப்பினும் விராட் கோலி மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்க தொடர்ந்து திணறி வருகிறார். நேற்று கோலி 35 ரன்களில் இருந்த போது நவாஸ் பந்துவீச்சில் இப்திகாரிடம் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி ஆட்டமிழந்த முறையை சாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

சர்வதேச கிரிக்கெட்டில் கோலி அடித்த ரன்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும். ரோஹித் ஷர்மாவின் விக்கெட் சரிந்த சிறிது நேரத்தில் கோலி அப்படி ஒரு ஷாட்டை ஆடியதால் மிகவும் ஏமாற்றமடைந்து இருப்பார்.

ஒரு இளம் வீரர் அந்த மாதிரியான ஷாட்டை விளையாடியிருந்தால் நிறைய விமர்சனங்கள் ஏற்பட்டு இருக்கும். அந்த ஷாட்டை இளம் வீரர் அடித்து ஆட்டமிழக்காதது நல்லது. நீங்கள் 34 பந்துகளில் விளையாடி 35 ரன்கள் எடுத்தீர்கள்.

உங்கள் கேப்டன் இப்போது தான் ஆட்டமிழந்தார். நீங்கள் உங்கள் இன்னிங்ஸை இன்னும் சற்று சிறப்பாக கட்டமைத்து விளையாடி இருந்தால், முடிவை மேலும் எளிதாகி இருக்கலாம். நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஏனென்றால் அப்போது நீங்கள் ஒரு பெரிய ஷாட்டை ஆட முயற்சிக்கிறீர்கள். ஆனால் இங்கே நீங்கள் சிக்ஸர் அடிக்க முயற்சிக்காமல் ஆட்டமிழந்து உள்ளீர்கள்.

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்