இளம் வயதில் சதம் அடித்த விக்கெட் கீப்பர்... 94 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேமி ஸ்மித்
|டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஜேமி ஸ்மித் படைத்துள்ளார்.
மான்செஸ்டர்,
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை தனது முதல் இன்னிங்சில் 236 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் சதம் (111 ரன்) அடித்து அசத்தினார். இதன் பின்னர் 122 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அணி தற்போது வரை 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 94 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் சதமடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம்வயதில் சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை லெஸ் அமெஸ் வைத்திருந்தார். அவர் கடந்த 1930-ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார்.
லெஸ் அமெஸ் 24 வயது 63 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். இந்த 94 வருட சாதனையை 24 வயது 42 நாட்களில் ஜேமி ஸ்மித் முறியடித்து அசத்தியுள்ளார் .