நீங்கள் கவலைப்பட தேவையில்லை - அஸ்வின் கருத்துக்கு பாக்.முன்னாள் வீரர் பதிலடி
|பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் கவலை அளிப்பதாக அஸ்வின் கூறியிருந்தார்.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்காளதேசம், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் வேளையில் தற்போது வங்காளதேச அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இந்திய வீரர் அஸ்வின் கூறியிருந்தார்.
இந்நிலையில் அஸ்வினின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அகமது சேஷாத் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், "பாகிஸ்தான் கிரிக்கெட்டை நினைத்து ஏன் ஆச்சரியமடைகிறீர்கள் அஸ்வின்? நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் பாகிஸ்தானில் எல்லாம் சரியாகவே உள்ளது. பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் மைதானங்களை பார்க்கவில்லையா? தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருங்கிணைத்துள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பையை பார்க்கவில்லையா? அந்த தொடர் முடிவடைந்த பின் எத்தனை திறமையான வீரர்கள் வருவார்கள் என்று எண்ணிப் பார்க்க தயாராகுங்கள்.
எப்படி வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குகிறோம் என்பதை கற்றுக் கொள்ள தயாராக இருங்கள். இதனையெல்லாம் பார்க்கலாம் ஏன் ஆச்சரியம் கொள்கிறீர்கள். டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை என்றால் என்ன? பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் குரூப் சேர்ந்து கொண்டு அரசியல் செய்தால் என்ன? பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் மோசமான விளையாடினால் என்ன? இதெல்லாம் ஒரு பிரச்சனையா ரவிச்சந்திரன் அஸ்வின். இதற்கெல்லாம் கவலைப்பட தேவையில்லை" என்று பதிலடி கொடுத்துள்ளார்.