< Back
கிரிக்கெட்
விராட் கோலியை விமர்சிக்கும் நீங்கள் ஐ.பி.எல். தொடரில் எத்தனை சதங்கள் அடித்துள்ளீர்கள்? - டி வில்லியர்ஸ் பதிலடி

image courtesy: PTI

கிரிக்கெட்

விராட் கோலியை விமர்சிக்கும் நீங்கள் ஐ.பி.எல். தொடரில் எத்தனை சதங்கள் அடித்துள்ளீர்கள்? - டி வில்லியர்ஸ் பதிலடி

தினத்தந்தி
|
2 May 2024 5:33 PM IST

விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேசுபவர்கள் கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் என்று ஏபி டி வில்லியர்ஸ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

கேப்டவுன்,

ஐ.பி.எல். தொடர் ஆரம்பித்த கால கட்டத்திலிருந்தே நட்சத்திர வீரர் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக ஏராளமான சாதனை படைத்துள்ள அவர், நடப்பு சீசனிலும் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 500 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் 10 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் இந்த தோல்விக்கு விராட் கோலிதான் காரணம் என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் நேரம் செல்ல செல்ல தன்னுடைய அரை சதம் அல்லது சதத்தை தொடுவதற்காக நிதானமாக விளையாடுவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

அதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவரை தேர்வு செய்யக்கூடாது என்றும் சிலர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவத்தைக் கொண்டுள்ள விராட் கோலி உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசுபவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி உண்மையாக தெரியாதவர்கள் என்று ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்ட்ரைக் ரேட் சம்பந்தமாக விராட் கோலி விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நீண்ட காலமாக நடந்து வரும் இது எனக்கு சோர்வை கொடுக்கிறது. இதைச் சொல்வதற்கு நான் விரக்தியடைகிறேன். விராட் கோலி கிரிக்கெட் விளையாடியவர்களில் ஒரு சிறந்த வீரர். அவர் ஐ.பி.எல். தொடரில் அபாரமாக செயல்பட்டுள்ளார். பெங்களூரு அணிக்காக அவர் குறிப்பிட்ட பங்களிப்பை அளித்து வருகிறார். ஆனால் கிரிக்கெட்டைப் பற்றிய உண்மையான அறிவு தெரியாமல் புள்ளிவிவரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சில வல்லுநர்கள் அவரைத் தொடர்ந்து விமர்சிக்கின்றனர்.

விமர்சிக்கும் நீங்கள் எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்? ஐ.பி.எல். தொடரில் எத்தனை சதங்கள் அடித்துள்ளீர்கள்? 2016-ல் மிகப்பெரிய சாதனை படைத்த சீசனை விட இந்த வருடம் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் இந்த விமர்சனங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது எனக்கு தெரியவில்லை. கனவில் விளையாடுவதுபோல பேட்டிங் செய்யும் நீங்கள் தொடர்ந்து இப்படியே விளையாடுங்கள் என்று நான் விராட் கோலியிடம் சொல்வேன்" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்