< Back
கிரிக்கெட்
அதிரடியாக விளையாடினால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் வெல்ல முடியாது - கோலிக்கு ஆதரவு தெரிவித்த ஆஸி. வீரர்

image courtesy:AFP

கிரிக்கெட்

அதிரடியாக விளையாடினால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் வெல்ல முடியாது - கோலிக்கு ஆதரவு தெரிவித்த ஆஸி. வீரர்

தினத்தந்தி
|
23 March 2024 12:11 PM IST

அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் வெல்ல முடியாது என்று ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று சற்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர். அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் வெல்ல முடியாது என்று ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலியை டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யாமல் இந்தியா தவறு செய்து விடக்கூடாது என்ற எச்சரிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"விராட் கோலி சூழ்நிலையை பார்த்து விளையாடுபவர். சில மைதானங்களில் நீங்கள் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டிய அவசியம் இருக்காது. உங்களுக்கு முன்னே என்ன சூழ்நிலை இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் விளையாட வேண்டும். அந்த வகையில் இந்தியாவுக்காகவும் ஆர்.சி.பி. அணிக்காகவும் விராட் கோலி சில மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடியதை நாம் பார்த்துள்ளோம்.

அந்த தருணங்களில் அவர் விளையாடியபோது நான் ஆஸ்திரேலிய அணியில் இருந்து பார்த்துள்ளேன். அவர் அதிகப்படியான அழுத்தத்தின் கீழ் அசத்தக்கூடியவர் என்பதை நாங்கள் அறிவோம். அவர் அப்படி விளையாடுவதை விரும்புகிறார். உலகக்கோப்பை போன்ற தொடர்களில் அழுத்தமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடிய வீரர்கள்தான் உங்களுடைய அணியில் இருப்பதை விரும்புவீர்கள். அது போன்ற சூழ்நிலைகளில் அனுபவமான வீரர்கள்தான் உங்களுக்காக உயர்ந்து நிற்பார்கள். விராட் கோலி அது போன்றவர்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்