'எல்லா நேரமும் அதிரடியாக ஆட முடியாது' - இங்கிலாந்தின் யுக்தியை விமர்சிக்கும் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்
|3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.
ராஜ்கோட்,
ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது. 'பாஸ்பால்' என்ற அதிரடியான பேட்டிங் அணுகுமுறைக்கு பிறகு இங்கிலாந்து சந்தித்த மிக மோசமான தோல்வி இதுதான்.
இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூட்டணி பெற்ற மோசமான தோல்வி இதுதான். இந்த தோல்வி அவர்களின் 'பாஸ்பால்' யுக்தியின் விளைவை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் எல்லா நேரமும் ஆக்ரோஷமாக விளையாட முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது அதிரடியாக விளையாடலாம். 'பாஸ்பால்' என்பது தாக்குதல் ஆட்டத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. ஆனால் இங்கு நெருக்கடியை திறம்பட கையாள்வதும் முக்கியம். 3-வது நாளில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் விளையாடிய விதத்தை பாருங்கள். 30 அல்லது 40 பந்துகள் எதிர்கொண்டு அழுத்தத்தை தணித்ததும் பந்தை பவுண்டரிக்கு விளாச ஆரம்பித்தனர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட். இந்தியா மொத்தம் 228.5 ஓவர்களில் 875 ரன்கள் குவித்தது. இங்கு இந்தியாவின் பேட்டிங் சலிப்பை ஏற்படுத்தியது என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
இந்திய மண்ணில் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்வது என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் ஆலோசிக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்த விதம், குறிப்பாக ஜோ ரூட் தவறான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்தபோது எனது கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை' என்றார்.