நீங்கள்தான் ஜோக்கர் - ராயுடுவை கிண்டல் செய்த கெவின் பீட்டர்சன்...வீடியோ வைரல்
|அம்பத்தி ராயுடுவை "ஜோக்கர்" என்று கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 26-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட்ட அம்பத்தி ராயுடுவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. ஏனென்றால் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக ஆடிய அம்பத்தி ராயுடு வெளிப்படையாகவே இரு அணிகளுக்கும் ஆதரவாக பேசி வந்தார். அதேபோல் பெங்களூரு அணியையும், விராட் கோலியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்ற பின், நேரலையில் பேசிக் கொண்டிருந்த அம்பத்தி ராயுடுவை, பீட்டர்சன் ஜோக்கர் என்று கிண்டல் செய்துள்ளளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன் ஐதராபாத் அணிக்கு ஆதரவாக பேசிய அம்பத்தி ராயுடு, சட்டைக்கு மேல் ஆரஞ்ச் நிறத்தினாலான கோட் ஒன்றையும் அணிந்து கொண்டார். ஆனால் கொல்கத்தா அணி போட்டியில் வென்ற பின், உடனடியாக ஆரஞ்ச் நிற கோட்-ஐ மாற்றவிட்டு உடனடியாக நீல நிறத்தினாலான கோட்-ஐ அணிந்து கொண்டு நேரலை விவாதத்தில் பங்கேற்றார்.
முன்னாள் வீரர்களான பீட்டர்சன், மேத்யூ ஹெய்டன், அம்பத்தி ராயுடு மற்றும் தொகுப்பாளர் மயந்தி லாங்கர் ஆகியோர் நேரலையில் விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது அம்பத்தி ராயுடுவின் கோட் மாற்றத்தை கண்டுகொண்ட மயந்தி லாங்கர், அம்பத்தி ராயுடு அவரின் கோட் நிறத்தை ஆரஞ்சில் இருந்து நீலத்திற்கு மாற்றிவிட்டார் என்று கூறினார்.
இதனால் உற்சாகமான பீட்டர்சன், ராயுடுவை பார்த்து, நான் கடைசி வரை எனது பர்பிள் நிற கோட்-ஐ மாற்றவில்லை. நீங்கள் ஒரு ஜோக்கர். கடைசி வரை ஜோக்கராகதான் இருப்பீர்கள் என்று கிண்டல் செய்தார். அதற்கு ராயுடு, நான் இரு அணிகளையும் ஆதரிக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நல்ல கிரிக்கெட்டை ஆதரிக்கிறேன் என்று கூறி சமாளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.