"என்னுடன் பேச உங்களுக்கு சம்மதம்தானே?"- ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
|கடந்த காலங்களில் ரவீந்திர ஜடேஜாவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மிக கடுமையாக விமர்சித்து வந்தார்.
துபாய்,
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் வகையில் ரவீந்திர ஜடேஜா 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அவர் 29 பந்துகளில் 2 இமாலய சிக்சர் உட்பட 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
போட்டியின் வெற்றிக்கு பிறகு, வெற்றிக்கு காரணமான ஜடேஜா பரிசளிப்பு விழாவிற்கு வந்தபோது அவரை பிரபல வர்ணனையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி எடுத்தார்.
அப்போது, அவர் ஜடேஜாவிடம், " இங்கே ஜடேஜா என்னுடன் உள்ளார். அவரிடம் முதல் கேள்வி. என்னுடன் பேச உங்களுக்கு சம்மதம்தானே..?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜடேஜா, " நிச்சயமாக. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை" என்று பதிலளித்தார். பின்னர் இருவரும் உரையாடினார். இந்த நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் பேசி வருகின்றனர்.
கடந்த காலங்களில் ரவீந்திர ஜடேஜாவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மிக கடுமையாக விமர்சித்து வந்தார். ஜடேஜா குறித்த மஞ்ச்ரேக்கரின் தரம் தாழ்ந்த விமர்சனங்களால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.