< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால்

தினத்தந்தி
|
21 Feb 2024 11:44 PM GMT

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ஆர்.அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர்.

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் (893 புள்ளி) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (818) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் 29 புள்ளிகளை ஈட்டி தனது முதலிடத்தை வலுப்படுத்தி இருக்கிறார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் (780), பாகிஸ்தானின் பாபர் அசாம் (768) ஒரு இடம் முன்னேறி முறையே 3-வது, 4-வது இடத்தை பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (766) இரு இடம் சறுக்கி 5-வது இடம் வகிக்கிறார்.

இங்கிலாந்து தொடரில் ஒதுங்கிய இந்திய நட்சத்திர வீரர் விராட்கோலி (752) 7-வது இடத்தில் தொடருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் (131 ரன்) விளாசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (731) ஒரு இடம் அதிகரித்து 12-வது இடத்தை பெற்றுள்ளார்.

இதே டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 214 ரன்கள் நொறுக்கிய இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் எகிறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். இது ஜெய்ஸ்வாலின் (699) சிறந்த தரநிலையாகும். ராஜ்கோட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததால் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 41-வது இடத்தில் இருந்து 34-வது இடத்தை எட்டியுள்ளார்.

3-வது டெஸ்டில் அறிமுக வீரராக களம் கண்டு இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய இந்திய வீரர் சர்ப்ராஸ் கான் 75-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 100-வது இடத்திலும் நுழைந்துள்ளனர். இந்த போட்டியில் 153 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் 12 இடம் உயர்ந்து 13-வது இடத்தை தனதாக்கினார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 876 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' ஆக வலம் வருகிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (839 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதனால் 2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (834) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய பவுலர்கள் கம்மின்ஸ் (828), ஹேசில்வுட் (818) ஆகியோர் முறையே 4-வது, 5-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர். 3-வது டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா (789) 3 இடம் அதிகரித்து 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா (469) முதலிடத்திலும், ஆர்.அஸ்வின் (330) 2-வது இடத்திலும், வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (320) 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் அக்ஷர் பட்டேல் (281) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடமும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (280) ஒரு இடம் சரிந்து 5-வது இடமும் வகிக்கின்றனர்.

மேலும் செய்திகள்