இந்திய அணியில் வாய்ப்புக்கான கதவை தட்டவில்லை; தகர்த்துக் கொண்டிருக்கிறார் - ஜெய்ஸ்வால் குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து
|கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் ஜெய்ஸ்வால்.
கொல்கத்தா,
ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால் 150 ரன் இலக்கை 13 வது ஓவரிலேயே அடைந்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். மேலும், இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் உள்ள டு பிளிஸ்சிஸ்க்கும் ஜெய்ஸ்வாலுக்கும் 1 ரன் மட்டுமே வித்தியாசம். இவர் அனைத்து விதமான மைதானங்களிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான வாய்ப்பிற்கான கதவை வெறுமனே தட்டவில்லை. தொடர்ச்சியாக ரன் குவித்து அதை தகர்த்துக் கொண்டுள்ளார். தனது அபார டொமஸ்டிக் கிரிக்கெட் பார்மை அப்படியே ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடரச் செய்துள்ளார்.
என்ன ஒரு திறன் படைத்த வீரர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பான வீரர்களின் கைகளில் இருக்கிறது. இதன் மூலம் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.