< Back
கிரிக்கெட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷனை களம் இறக்க வேண்டும் - பாண்டிங் சொல்கிறார்
கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷனை களம் இறக்க வேண்டும் - பாண்டிங் சொல்கிறார்

தினத்தந்தி
|
30 May 2023 5:31 AM IST

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷனை விக்கெட் கீப்பராக பயன்படுத்த வேண்டும் என்று ரிக்கிபாண்டிங் வலியுறுத்தியுள்ளார்.

லண்டன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை லண்டன் ஓவலில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது.

ரிஷப் பண்ட் காயத்தால் ஒதுங்கி இருப்பதால் விக்கெட் கீப்பிங் பணியை கே.எஸ்.பரத் கவனிப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனை விக்கெட் கீப்பராக பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாண்டிங் கூறுகையில், 'இந்திய அணியில் நான் இருந்திருந்தால் இறுதிப்போட்டியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும். இந்த டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இஷான் கிஷனுடன் தான் களத்திற்கு செல்வேன். அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வீரராக இருப்பார். சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்வார். அதிரடியாக ரன் குவிப்பார். அது தான் வெற்றிக்கு தேவையாகும்.

இதே போல் இந்திய அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களையும் ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் ஜடேஜா 6-வது வரிசையில் பேட்டிங் செய்வார். பேட்டிங் திறனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். 4-வது மற்றும் 5-வது நாளில் ஆடுகளத்தில் பந்து சுழலத் தொடங்கி விட்டால் தரமான 2-வது சுழற்பந்து வீச்சாளர் அவசியமாகும்' என்றார்.

இதற்கிடையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் குறைந்தது முதல் 4 நாட்கள் ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதை உறுதி செய்யும் வகையில் உள்ளூர் கிரிக்கெட் கமிட்டியுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

மேலும் செய்திகள்