< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி அணியை வீழ்த்தி யு.பி. வாரியர்ஸ் திரில் வெற்றி
கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி அணியை வீழ்த்தி யு.பி. வாரியர்ஸ் திரில் வெற்றி

தினத்தந்தி
|
8 March 2024 11:00 PM IST

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் விளையாடின.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி , முதலில் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 59ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணி சார்பில் டைட்டாஸ் சது, ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 139 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் மெக் லானிங், சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்தார். எனினும் மற்ற பேட்ஸ்மேன்கள், சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்த நிலையில், முதல் பந்து சிக்சரும், இரண்டாவது பந்தில் 2 ரன்களும் எடுக்கப்பட்டது. 4 பந்துகளில் 2 ரன்களே தேவைப்பட்ட நிலையில், டெல்லி அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது தான் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. கிரேஸ் ஹாரீசின் அபார பந்துவீச்சால் டெல்லி அணி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் உ.பி. வாரியர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்