இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க தயார் - கவுதம் கம்பீர் விருப்பம்
|இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
அபுதாபி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான 42 வயதான கவுதம் கம்பீர் அபுதாபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார். அதில் அவர் பேசியதாவது:-
எனது அனுபவத்தை வைத்து இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பது மற்றும் உலக கோப்பையை வெல்ல உதவுவது குறித்து பலரும் என்னிடம் கேட்கின்றனர். இந்த கேள்விக்கு நான் எங்கும் பதில் அளிக்கவில்லை. ஆனால் இப்போது உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். நமது தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட பெரிய கவுரவம் எதுவும் இல்லை.
ஏனென்றால் அந்த பதவி இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்கள் மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். அவர்களின் ஆதரவும், பிரார்த்தனையும்தான் இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவும்.
கிரிக்கெட்டில் முக்கியமானது அச்சமின்றி விளையாட வேண்டும். வீரர்களின் ஓய்வறையில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவ வேண்டும். ஏனெனில் மகிழ்ச்சியான ஓய்வறையே வெற்றி பெறும் அறையாகவும் மாறுகிறது. இந்த மந்திரத்தைதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் பின்பற்றினேன். கடவுளின் அருளால் அது எங்களுக்கு கைகொடுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு கம்பீரின் பெயர் அடிபடும் நிலையில் அவர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.