உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: விக்கெட் கீப்பிங் குறித்து தோனியிடம் நிறைய ஆலோசனைகளை பெற்றேன் - கே.எஸ்.பரத்
|2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
லண்டன்,
2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டட்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் யாரை தேர்வு செய்யலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யலாம் என கேள்வி எழும்பி உள்ளது. அதிரடி ஆட்டக்காரர் இஷன் கிஷானா அல்லது கே.எஸ்.பரத்தா என இரு விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் யாரை கேப்டன் ரோகித் தேர்வு செய்வார் என்ற கேள்வி எழும்பி உள்ளது.
இந்நிலையில், கே.எஸ்.பரத், அனுபவ வீரரும், சீனியருமான தோனியிடம் இருந்து விக்கெட் கீப்பிங் சார்ந்த ஆலோசனைகள் அதிகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனின் போது தோனியுடன் பேசி இருந்தேன். இங்கிலாந்தில் அவரது விக்கெட் கீப்பிங் அனுபவத்தை அப்போது என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் பொதுவாக விக்கெட் கீப்பர்களுக்கு தகுந்த சில விஷயங்கள் குறித்தும் பேசினார். அது நல்லதொரு உரையாடலாக அமைந்தது. அதிலிருந்து நான் நிறைய உள்ளார்ந்த படிப்பினை பெற்றேன்.
கீப்பராக செயல்பட முனைப்பு வேண்டும் என நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் வீசப்படும் 90 ஓவர்களையும், ஒவ்வொரு பந்தாக விக்கெட் கீப்பர் கவனிக்க வேண்டும். இது ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
இவ்வாறு பரத் தெரிவித்துள்ளார்.