உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் - காரணம் என்ன...?
|உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மாற்று வீரராக அணியில் இடம் பிடித்திருந்தார்.
துபாய்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.
கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக (ஸ்டாண்ட் பை) வீரர்களாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் ஜூன் 2 அல்லது 3ல் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதன் காரணமாக அவருக்கு பதிலாக இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்துள்ளார். மேலும், கடந்த ரஞ்சி டிராபி தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 1 சதம், 1 அரைசதத்துடன் 404 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.