உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!
|50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.
மும்பை,
10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி சதமடித்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முறையே 117 ரன்கள் மற்றும் 105 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில் மீண்டும் களமிறங்கினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 39 ரன்களுடனும் சுப்மன் கில் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.