< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அசத்தல்: சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.!
கிரிக்கெட்

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அசத்தல்: சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.!

தினத்தந்தி
|
26 Jun 2023 10:02 PM IST

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றிபெற்றது.

ஹராரே,

உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 374 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 65 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்தார்.

பிரண்டன் கிங் 76 ரன்களும், சார்லஸ் 54 ரன்களும், கீமோ பால் 46 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் (37), மேக்ஸ் ஓடவுட்(36) அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக தேஜா நிடமானுரு சிறப்பாக விளையாடினார். அவர் சதமடித்து (111) அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் தன் பங்குக்கு 67 ரனகள் எடுத்தார்.

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணி, இறுதிகட்டத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. எனினும், நெதர்லாந்து அணி கடைசிவரை வெற்றிக்காக போராடியது.

குறிப்பாக, கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49வது ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரியுடன் நெதர்லாந்து அணி 21 ரன்கள் திரட்டியது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில், அல்ஜாரி ஜோசப் வீசிய சிறப்பான பந்தில் லோகன் வென் பீக் ஹோல்டரிடம் கேட்ச்சாகி அவுட்டானார். இதனால், ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரை ஹோல்டர் வீச வந்தார். அந்த ஓவரில் நெதர்லாந்து அணியின் வான் பீக், 3 பவுண்டரி, 3 சிக்சர் என மொத்தம் 30 ரன்கள் விளாசினார்.

பின்னர் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 ரன்களே எடுக்கமுடிந்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றிபெற்றது.

மேலும் செய்திகள்