< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா...!

தினத்தந்தி
|
10 Nov 2023 9:19 AM IST

உலகக்கோப்பை வரலாற்றில் தங்கள் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜானி பேர்ஸ்டோ சாதனையை ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார்.

பெங்களூரு,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இலங்கை நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய ரவீந்திரா 42 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். இந்த 42 ரன்களையும் சேர்த்து 2023 உலகக்கோப்பையில் அவர் 565 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தன்னுடைய இந்த முதல் உலகக்கோப்பையிலேயே அபாரமாக விளையாடி 565 ரன்களை அடித்துள்ளார்.

இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2019 உலகக்கோப்பையில் ஜானி பேர்ஸ்டோ தன்னுடைய அறிமுகத் தொடரில் 532 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் 23 வயதுக்குள் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 வருட சாதனையையும் ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 1996 உலகக்கோப்பையில் சச்சின் தன்னுடைய 23 வயதுக்குள் 523 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த சாதனையை ரச்சின் ரவீந்திரா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்