< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று:நேபாளம் அதிரடி ஆட்டம்..ஜிம்பாப்வேக்கு 291 ரன்கள் இலக்கு..!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று:நேபாளம் அதிரடி ஆட்டம்..ஜிம்பாப்வேக்கு 291 ரன்கள் இலக்கு..!

தினத்தந்தி
|
18 Jun 2023 4:07 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் இன்று தொடங்கியது.

ஹராரே,

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஒருநாள் உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான 50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் இன்று தொடங்கியது. இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் களம் இறங்கினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு171 ரன்கள் சேர்த்த நிலையில் குஷால் புர்டெல் 99 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குஷால் மல்லா களம் இறன்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிப் ஷேக் 66 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ரோஹித் பவுடல் களம் இறங்கினார்.

ரோஹித் பவுடல்-குஷால் மல்லா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குஷால் மல்லா 41 ரன்னும், ரோஹித் பவுடல் 31 ரன்னும் எடுத்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ஆரிப் ஷேக், குல்சன் ஜா இணை ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்க உள்ளது.

மேலும் செய்திகள்