உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து வீரர் பவுல்ட் சாதனை!
|உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் பவுல்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பெங்களூரு,
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 171 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பவுல்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இலங்கை நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பவுல்ட் எடுத்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து உலகக்கோப்பை போட்டிகளில் அவரது விக்கெட் எண்ணிக்கை 52 ஆக (28 ஆட்டம்) உயர்ந்தது. உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் நியூசிலாந்து பவுலர் என்ற சாதனையை படைத்தார்.
ஒட்டுமொத்தத்தில் இந்த வரிசையில் 6-வது இடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் டாப்-5 இடங்களில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (71 விக்கெட்), இலங்கையின் முரளிதரன் (68 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (59 விக்கெட்), இலங்கையின் மலிங்கா (56 விக்கெட்), பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (55 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.