உலகக்கோப்பை கிரிக்கெட்; லேதம், பிலிப்ஸ் அபார ஆட்டம்...நியூசிலாந்து 288 ரன்கள் குவிப்பு...!
|நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங், க்ளென் பிலிப்ஸ், டாம் லேதம் அரைசதம் அடித்தனர்.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைப்பெற்று வரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கான்வே 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார்.
இந்த இணை நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய யங் அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்னிலும், ரவீந்திரா 32 ரன்னிலும், அடுத்து வந்த டேரில் மிட்செல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டாம் லேதம், க்ளென் பிலிப்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ், லேதம் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பிலிப்ஸ் 71 ரன் எடுத்த நிலையிலும், லேதம் 68 ரன் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து மார்க் சாம்ப்மென், மிட்செல் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங் 54 ரன், டாம் லேதம் 68 ரன், க்ளென் பிலிப்ஸ் 71 ரன் எடுத்தனர். இதையடுத்து 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.