"ஜானி ஜானி, யெஸ் பாப்பா": பாட்டு பாடி ஜானி பேர்ஸ்டோவை உற்சாகப்படுத்திய ரசிகர்கள்
|உலகக்கோப்பையில் ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்ற நட்சத்திர வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து பல சவால்களை சந்தித்து வருகிறது. தோல்விகள் மற்றும் முக்கிய வீரர்களின் மோசமான ஆட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்து அணியில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனில் இருந்து உலகின் மிகச்சிறந்த வீரராக உயர்ந்தவர் ஜானி பேர்ஸ்டோவ். ஆனால், இந்த ஆண்டு அவருக்கு சாதகமாக இல்லை. நடப்பு உலகக்கோப்பையில் அவரும் பேட்டிங்கில் தடுமாற்றங்களை சந்திக்கிறார். எனினும், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்ற நட்சத்திர வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பவுண்டரிக்கு அருகே நின்று பீல்டிங் செய்யும்போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
அவ்வகையில், ஜானி பேர்ஸ்டோவை ரசிகர்கள் சிலர் வித்தியாசமான முறையில் வாழ்த்தி உற்சாகப்படுத்தினர். பவுண்டரி அருகே பேர்ஸ்டோவ் நின்றபோது, ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் சிலர், "ஜானி ஜானி, யெஸ் பாப்பா" என்ற நர்சரி பாடலை பாடத் தொடங்கினர். பேர்ஸ்டோவ் ஆரம்பத்தில் பாடலை கவனிக்காமல் கடந்து செல்ல முயன்றார். அதன்பின்னர் தலையை அசைத்து அவர்களின் சைகையை ஏற்றுக்கொண்டார். வேடிக்கையான இந்த சம்பவம் தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.