< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்தியா பதற்றமாக இருக்கும் - நியூசிலாந்து முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்தியா பதற்றமாக இருக்கும் - நியூசிலாந்து முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
14 Nov 2023 7:58 AM IST

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.

வெல்லிங்டன்,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மும்பையில் மோத உள்ளன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்தியா பதற்றமாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இதேபோல உச்சகட்ட பார்மில் இந்தியா அரையிறுதிக்கு சென்றது. அதேநேரத்தில் நாங்கள், பாகிஸ்தானை முதல் நான்கு இடங்களுக்குள் வரவிடாமல் வைப்பதில் கவனம் செலுத்தினோம்.

அதேபோலவே இம்முறையும் இந்தியா சொந்த மண்ணில் லீக் சுற்றில் டாப் இடத்தை பிடித்து கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணியாக அரையிறுதிக்கு வந்துள்ளது. ஆனால் தோற்பதற்கு எதுவுமில்லை என்ற சூழ்நிலையில், நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது.

இந்த உலகக்கோப்பையில் இந்தியா ஒரு அணியை எதிர்கொள்வதற்கு பதற்றமடையும் என்று சொன்னால் அது நியூசிலாந்தாக இருக்கும். 2019-ல் மழையால் 2 நாட்கள் அப்போட்டி நடைபெற்றது வித்தியாசமாக இருந்தது. மான்செஸ்டரில் 80% இந்திய ரசிகர்கள் இருந்த நிலையில் நியூசிலாந்துக்கு குறைவான ஆதரவே இருந்தது.

அந்த ஆட்டத்தில் நாங்கள் நிர்ணயித்த இலக்கு போதாது என்று அனைவரும் நினைத்தாலும் நானும் வில்லியம்சனும் 240 - 250 ரன்கள் போதும் என்று நம்பினோம். அதை தொடர்ந்து போல்ட், ஹென்றி ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுத்த நிலையில் மார்ட்டின் கப்டில் சரியான நேரத்தில் தோனியை ரன் அவுட் செய்தார்.

அதேபோல இம்முறையும் டாஸ் வென்று எதை செய்தாலும் முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும் இந்தியா அதிகம் நம்பியிருக்கும் ரோகித், கில், விராட் ஆகியோரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கி மிடில் ஆர்டர் மீது அழுத்தத்தை போட முயற்சிக்க வேண்டும். இந்திய பவுலர்களுக்கு எதிராக விக்கெட்டை கைவசம் வைத்திருந்தால் வெற்றி எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்