உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இலங்கை அணிகள் மும்பையில் இன்று மோதல்
|உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பையில் இன்று மோதுகின்றன.
மும்பை,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியான இந்தியா 12 புள்ளிகளுடன் கம்பீரமாக வலம் வருகிறது. அரைஇறுதியை வெகுவாக நெருங்கி விட்ட இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அதிகாரபூர்வமாக எட்டி விடும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 398 ரன்கள்), விராட்கோலி (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 354 ரன்கள்), லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளனர். அதே சமயம் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளனர். அவர்களும் நிலைத்து நின்று ஆடினால் பேட்டிங் மேலும் வலுவடையும். 'ஷாட் பிட்ச்' பந்து வீச்சில் அடிக்கடி விக்கெட்டை பறிகொடுக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் அந்த பலவீனத்தை சரிசெய்ய வலைப்பயிற்சியில் 'ஷாட் பிட்ச்' பந்து வீச்சை அதிக நேரம் எதிர்கொண்டு தன்னை தயார்படுத்தி இருக்கிறார்.
பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி மிரட்டுகிறார்கள். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்னும் குணமடையாததால் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார். அவர் நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்துக்கு முன்பு வரை களம் திரும்ப வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி நேற்று தெரிவித்தார்.
இலங்கை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 4 தோல்வி கண்டு 4 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் பணிந்த இலங்கை அடுத்து நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியது. கடைசியாக அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அடங்கியது. இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் மெகா வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்து விடும்.
இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நிலையற்றதாக இருக்கிறது. அந்த அணி பேட்டிங், பந்து வீச்சு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் எழுச்சி கண்டால் மட்டுமே இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும்.
உலகக் கோப்பை தொடரில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற முடியாமல் தவிக்கும் இலங்கை கடைசியாக 2011-ம் ஆண்டு இதே வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 167 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 98-ல் இந்தியாவும், 57-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 11 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 9 முறை மோதியதில் இரு அணிகளும் தலா 4-ல் வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. மும்பை மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால் ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
இலங்கை: பதும் நிசாங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ் (கேப்டன்), சமரவிக்ரமா, அசலங்கா, மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா அல்லது வெல்லாலகே, கசுன் ரஜிதா, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, துஷ்மந்தா சமீரா.