உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் இன்று பலப்பரீட்சை
|உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை,
10 நாடுகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதால் திடமான நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் இறங்கும்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக ஆடுகிறார்கள். இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியின் ரன் குவிப்பில் முதடலித்தில் இருக்கும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. இது இந்திய அணிக்கு இழப்பாகும். அவர் ஆடாவிட்டால் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் காண வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக ஐ.சி.சி.கோப்பை எதனையும் வெல்லாத குறையை போக்க தீவிரமாக தயாராகி வரும் இந்திய அணி, இந்த உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் பொருந்தியதாக திகழ்கிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேனும், பந்து வீச்சில் ஹேசில்வுட், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆல்-ரவுண்டர்களான மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர்.
பயிற்சி ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். மொத்தத்தில் வலுவான இரு அணிகள் போட்டியை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த போட்டிக்கு மழை பாதிப்புக்கு இருக்காது என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 149 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 83-ல் ஆஸ்திரேலியாவும், 56-ல் இந்தியாவும் வென்று இருக்கின்றன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இதில் 1987-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதும் அடங்கும்.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.