உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் 156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து.!
|இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி156 ரன்களில் சுருண்டது.
பெங்களூரு,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.
இந்த கிரிக்கெட் திருவிழாவில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதி வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேட்ஸ்டோவும், டேவிட் மலனும் களமிறங்கினர்.
இந்த ஜோடி, அணிக்கு ஓரளவு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. டேவிட் மலன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 30 ரன்களில் அவுட்டானார். அடுத்துவந்த ஜோ ரூட், 3 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
குறிப்பாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துகளை வீசினர். இலங்கையின் பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். அத்துடன் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
ஒருபுறம் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் 8 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 1 ரன்னிலும், மொயீன் அலி 15 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிதுநேரம் போராடிய ஸ்டோக்ஸ், 43 ரன்கள் எடுத்த நிலையில், கேட்சாகி ஆட்டமிழந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு 156 ரன்கள் எடுத்த நிலையில், ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளையும், ரஜிதா மற்றும் அனுபவ வீரர் மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.